search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் தகனம்"

    21 துப்பாக்கி குண்டுகள் முழங்க கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. #ManoharParrikar #ManoharParrikarcremated #RIPManoharParrikar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியாக 4 முறை பதவி வகித்தவருமான மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    கோவாவின் பான்ஜிம் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பாரிக்கரின் உடல் இன்று காலை கொண்டு செல்லப்பட்டு அங்கு 10.30 மணி வரை அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கலா அகாடமிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

    அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும். பாரிக்கர் மறைவுக்கு இன்று தேசிய துக்கம் அனுசரிக்கப்படும். கோவா அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

    மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி அஞ்சலி செலுத்தியபோது துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார். அவரை அருகில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தி, தேற்றினர்.

    இறுதிச்சடங்குகள் முடிந்து மாலை சுமார் 5 மணியளவில் மனோகர் பாரிக்கரின் உடல் தேசியக்கொடியால் மூடப்பட்டு, ராணுவ வாகனத்தில் ஏற்றி பனாஜி நகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மிராமர் கடற்கரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.



    அங்கு கோவா முன்னாள் முதல் மந்திரி தயானந்த் பன்டோக்கர் நினைவிடத்தின் அருகே வைக்கப்பட்ட மனோகர் பாரிக்கரின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.



    அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த மூவர்ண தேசியக்கொடி பாரிக்கரின் இரு மகன்களான அபிஜத் மற்றும் உதபால் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மனோகர் பாரிக்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. #ManoharParrikar #ManoharParrikarcremated #RIP#ManoharParrikar
    திருவண்ணாமலை அருகே ஜெயின் மதத்தை சேர்ந்த 72 வயது பெண் துறவி ஜீவ சமாதி அடைந்தார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமலை கிராமத்தில் ராஜராஜசோழன் சகோதரி குந்தவை நாச்சியார் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில் உள்ளது.

    இங்கு ஸ்வஸ்தி ஸ்ரீடாக்டர் தவளகீர்த்தி சுவாமிகள் ஜெயின் மடம் ஒன்றினை நிறுவி ஆசிரமம் நடத்தி வருகிறார்.

    ஏராளமான துறவிகளும், முனிவர்களும், மாதாஜிகளும் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது 2 நிர்வாண முனிவர்களும், 10 பெண் துறவிகளும் தங்கி உள்ளனர்.

    அவர்களில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஸ்ரீசுகுந்தன் மதிமாதாஜி (வயது 72) என்ற பெண் துறவியும் தங்கியிருந்தார். அவர் ஜீவ சமாதி அடைவதற்காக கடந்த 6 நாட்களுக்கு முன்பு உணவு மற்றும் தண்ணீரை குருசன்னிதானத்தின் முன்னிலையில் தியாகம் செய்தார். அவரது உடல் நிலையை அங்குள்ள பெண் துறவிகள் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் 6-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் ஸ்ரீசுகுந்தன் மதி மதாஜி ஜீவ சமாதி அடைந்தார்.

    கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அவரது உடலை பரிசோதனை செய்து மரணம் அடைந்ததை உறுதி செய்தார். இதையடுத்து 500 சமண பக்தர்கள் முன்னிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

    எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதுவையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #Prabhanjan
    புதுச்சேரி:

    சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். 73 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
     
    கடந்த மாதம் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபஞ்சன் மரணமடைந்தார்.

    மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இரங்கல் தெரிவித்தனர்.



    புதுவை மண்ணின் மைந்தரான எழுத்தாளர் பிரபஞ்சன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கலை இலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுவை பூர்வீக மக்கள் உரிமை சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதையேற்று முதல்- அமைச்சர் நாராயணசாமி எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என நேற்று அறிவித்தார்.

    இதையடுத்து, தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த பிரபஞ்சனின் உடல் இன்று காலை 8 மணிக்கு புதுவை ரெயில்வே நிலையம் அருகே பாரதி வீதி வ.உ.சி. வீதி சந்திப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், மாலை 4 மணியளவில் அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வம்பாகீரப்பாளையம் சன்னியாசிதோப்பில் உள்ள இடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது. #Prabhanjan
    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல் சாமராஜபேட்டையில் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    பெங்களூரு:

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலமானார். அவரது உடல் பசவனகுடியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அனந்த குமார் உடல் முப்படை விரர்கள் புடைசூழ மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
     
    அங்கு அவரது உடலுக்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்துக்கான பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், மத்திய மந்திரி சதானந்த கவுடா, அசோகா, ஈஸ்வரப்பா, அனுராக் தாகூர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனந்த குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 



    இதையடுத்து தேசிய கல்லூரி மைதானத்திற்கு அனந்த குமார் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் அனந்த குமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

    தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, பிராமண முறைப்படி அவரது இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சாமராஜபேட்டில் மதியம் 3.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தததால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

    டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி பாஜக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இன்று வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டது. அங்கும் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    அவரது இறுதி ஊர்வலம் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தை அடைந்தது. வாஜ்பாய் உடலை ராணுவ வாகனத்தில் இருந்து முப்படை வீரர்கள் இறக்கியபோது பிரதமர் மோடி துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். அவருடன் இருந்த தலைவர்களும் கண் கலங்கினர்.



    ராணுவ இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க இறுதிச்சடங்குகள் நடைபெற்ற பின்னர், முப்படையை சேர்ந்த தளபதிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ராணுவத்தினரின் சோக இசை மீட்கப்பட்டபோது அங்கு கூடியிருந்த மக்கள் பாரத ரத்னா புகழ் வாஜ்பாய் புகழ் வாழ்க என முழக்கமிட்டனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட போது அனைவரும் எழுந்து நின்றனர். 

    வாஜ்பாய் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது பேத்தி நிகாரிகாவிடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உறவினர்கள் வேத மந்திரங்கள் ஓதி இறுதி சடங்கு செய்தனர். அவரது உடல் மீது சந்தன கட்டைகள் வைக்கப்பட்டு எரியூட்டப்படடது. இறுதியாக, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.

    வாஜ்பாய் இறுதி சடங்கில் பாஜகவின் அமித்ஷா, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #AtalBihariVajpayee #RIPVajpayee 
    ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட திருச்சி மாணவி சுபஸ்ரீ உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.இதில் கிராம மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். #NEET2018 #Subasree #TNStudentSuicide
    கொள்ளிடம் டோல்கேட்:

    திருச்சியை அடுத்து நம்பர் ஒன் டோல்கேட் திருவள்ளுவர் அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47).இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கண்டோன்மெண்ட் கிளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி செல்வி (35). இந்த தம்பதியின் மகள் சுபஸ்ரீ (17), மகன் மிதுன் (13). இவர் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். சுபஸ்ரீ பிளஸ்-2 படித்து முடித்து 907 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.



    மருத்துவ படிப்பு படிக்க விரும்பிய இவர் நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதியிருந்தார். இதில் அவர் 24 மதிப்பெண்களே எடுத்து தேர்ச்சி பெறாததால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த சுபஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சுபஸ்ரீயின் உடலை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். பிரேத பரிசோதனை காலை 9.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. 10.50 மணிக்கு பிரேத பரிசோதனை முடிவடைந்து சுபஸ்ரீயின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தாய், தந்தை இருவரும் தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

    தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் மனோகரன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க செயலாளர் ராம்குமார் தலைமையில் கட்சியினர், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தே.மு.தி.க செயலாளர் வி.பி.தங்கமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி, இந்திய ஜனநாயக திருச்சி மாவட்ட செயலாளர் லெனின், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருணன் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சுபஸ்ரீயின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இதற்கிடையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மகளை இழந்து தவித்த தந்தை கண்ணனை செல்போனில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

    இதனையடுத்து சுபஸ்ரீ உடல் தகனம் செய்வதற்காக ஓயாமாரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது. மாணவி உடல் தகனம் நிகழ்ச்சியில் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார மக்களும் திரளாக கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ஓயாமாரி மின்மயானம் வரை 2 அரசு பஸ்கள் இலவசமாக இயக்கப்பட்டன. இந்த பஸ்சில் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்த பலர் மயானத்திற்கு சென்று மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, நேற்று மாலை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி சுபஸ்ரீ வீட்டிற்கு சென்றார். அங்கு மாணவியின் தந்தை கண்ணன், தாயார் செல்வி மற்றும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். பின்னர் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாணவி சுபஸ்ரீ உருவப்படத்துக்கு கே.என்.நேரு எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர்.  #NEET2018 #Subasree #TNStudentSuicide
    ×